இங்கிலாந்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படாததைத் தொடர்ந்து, பிரிட்டனில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த வழக்கை “அதிர்ச்சியூட்டும் சம்பவம்” என பிரிட்டிஷ் பிரதமர் Keir Starmer கண்டித்துள்ளார்.
2024 மற்றும் 2025 காலப்பகுதியில் ஹாம்ப்ஷயர் பகுதியில் 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது 14 வயதுடைய இரு சிறுவர்களும், 13 வயதுடைய மற்றொருவரும் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டனர்.
கடந்த வாரம் சவுத் ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற தீர்ப்பளிப்பு விசாரணையில், நீதிபதி நிக்கோலஸ் ரோவ்லண்ட் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல் “Youth Rehabilitation Orders” என்ற மறுவாழ்வு உத்தரவை பிறப்பித்தார்.
“இந்த குழந்தைகளை தேவையில்லாமல் குற்றவாளிகளாக மாற்ற விரும்பவில்லை” என நீதிபதி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனையின் கீழ் கடுமையான கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது 16 வயதான பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் BBC-க்கு வழங்கிய கருத்தில், “இந்த தீர்ப்பு என் முகத்தில் கல் எறிந்ததுபோல் இருந்தது” என தெரிவித்துள்ளார்.
“நீதிமன்றத்தில் மீண்டும் எல்லாவற்றையும் நினைத்து வேதனை அனுபவித்ததற்கான பலன் இதுதானா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பவத்தை குற்றவாளிகள் தங்களது கைப்பேசியில் பதிவு செய்து, சில காணொளிகளை இணையத்தில் பகிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் Attorney General’s Office தற்போது தீர்ப்பை மீளாய்வு செய்து வருகிறது. தண்டனை மிக மென்மையானதா என்பது குறித்து மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுமா என்பதையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.





