இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் (நாணய அச்சிடல்) 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த 17 மாத காலப்பகுதியில் மட்டும் புழக்கத்திலிருந்த நாணயத்தின் அளவு 303,956 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம்’ என்ற கடிதத் தலைப்பின் கீழ் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் இன்று (24) இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் (2025 மார்ச் 28 மற்றும் 2026 மே 22) தரவுகளை பகுப்பாய்வு செய்து, பணப்புழக்கம் அதிகரித்துள்ள விதம் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி, 2025 ஜனவரி நிலவரப்படி ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் 14,439.1 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதுடன், அது 2026 மார்ச் மாதமாகும்போது 16,585.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 15 மாதங்களில் மட்டும் பணப்புழக்கமானது 2,146.1 பில்லியன் ரூபாவினால் (2.1 ட்ரில்லியன் ரூபாவினால்) அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாத காலப்பகுதியில், ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் (M2b) அல்லது தொழில்நுட்ப ரீதியாகப் பணம் அச்சிடுதல் ஊடாக மத்திய வங்கி பணத்தை உருவாக்கியுள்ள விதம் குறித்தும் அவர் இதில் வெளிப்படுத்தியுள்ளார்.





