கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 3 சீன நாட்டினர் செவ்வாய்க்கிழமை (19) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் மொபைல் போன்கள் மற்றும் பேட்டரிகள் பெருமளவில் கொண்டு வர முயன்றபோது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ. 5,140,000 மதிப்புள்ள 87 மொபைல் போன்கள் மற்றும் 140 பேட்டரிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் 34 வயதுடைய ஒரு பெண்ணும், 35 வயதுடைய இரு ஆண்களும் அடங்குவர்.
சுங்க சோதனையின் போது சில மொபைல் போன்கள் இனிப்புப் பொருட்கள் உள்ள பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் சிலவை சிறப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் காலணிகளின் உள்ளே மறைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





