ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணத்தை விளக்கிய மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கின் நிலவும் நெருக்கடி நிலை மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்தமையே இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கு முதன்மைக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவை அதிகரித்துள்ளமையினால் ரூபாவின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும், எரிபொருள் இறக்குமதியில் பெருமளவில் தங்கியுள்ள பல நாடுகளைப் பொதுவாகப் பாதித்துள்ள உலகளாவிய பொருளாதார அதிர்ச்சியின் விளைவு இது என்றும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.

அத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா பாரியளவில் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டில் நிலவிய குறிப்பிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும், தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபட்டு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக முடிவெடுப்பது சரியானதல்ல என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

“நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தினாலும், இந்தோனேசிய ரூபா 5.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இந்த நாணய வீழ்ச்சியானது நம்மைப் போன்ற ஏனைய நாடுகளுக்கும் பொதுவான ஒரு விடயம் என்பது தெளிவாகப் புரிகிறது. அதற்கு இணையாகவே இது நடந்துள்ளது, பெரியளவில் வேறுபட்டதாக இல்லை. இதற்குக் காரணம், இவற்றில் பெரும்பாலானவை எண்ணெயை முழுமையாக இறக்குமதி செய்து, அதற்காக அதிக செலவு செய்யும் நாடுகளாகும்.

2022 ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலையில், இலங்கைக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களினால் நமது ரூபா பாரியளவில் வீழ்ச்சியடைந்தது; அது உலகளாவிய காரணிகளால் அல்ல. ஆனால், தற்போதைய நிலவரப்படி இலங்கை ஏனைய ஒப்பிடக்கூடிய நாடுகளுடன் ஓரளவு ஒரே மட்டத்திலேயே உள்ளது. எனவே, இது வெளிப்புற அதிர்வுகளால் ஏற்படும் ஒரு விடயமாகும்.

நாணய மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைவதென்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் குறிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நமது பிரதான ஊடகவியலாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. தற்போது இந்திய ரூபா வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலுள்ளது, இந்தோனேசிய ரூபாவும் இன்றைய தினம் வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அதற்காக அந்த நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்றோ, ஸ்திரமற்றது என்றோ கூற முடியாது. அது ஒரு தவறான கருத்தாகும். நாணய மாற்று விகிதத்தை மாத்திரம் பார்த்து ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்லதா அல்லது கெட்டதா என்று கூறுவது கடினம். இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன.” என்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore