இலங்கையின் மொத்த ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் US$ 5.78 பில்லியன் அளவை கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 4.3% வளர்ச்சியாகும் எனவும் EDB கூறியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி US$ 1.38 பில்லியனாக பதிவாகி, 6% வளர்ச்சியை காட்டியுள்ளது. அதில் பொருட்கள் ஏற்றுமதி 9.87% அதிகரித்து US$ 1.06 பில்லியனாக உயர்ந்துள்ளது. சேவை ஏற்றுமதி US$ 317.16 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
EDB தலைவர் மங்கள விஜேசிங்க கூறுகையில், உலக பொருளாதார சவால்கள் இருந்தபோதும் இலங்கையின் ஏற்றுமதி துறை நிலைத்தன்மையுடன் வளர்ச்சி காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் தேங்காய் சார்ந்த பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், மின்னணு கூறுகள், கடல் உணவுகள், ரப்பர் பொருட்கள் மற்றும் ICT/BPM சேவைகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முக்கிய பாரம்பரிய ஏற்றுமதி துறைகளான ஆடை மற்றும் தேயிலை வருமானம் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் சந்தைகளில் தேவை குறைந்ததால் ஆடை ஏற்றுமதி 4.88% குறைந்துள்ளது. தேயிலை ஏற்றுமதியும் 6.82% வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா இலங்கையின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக தொடர்கிறது. இந்தியா தற்போது பிரிட்டனை முந்தி இரண்டாவது பெரிய சந்தையாக உயர்ந்துள்ளது.





