பிரான்ஸ் அரசு, இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் (Itamar Ben-Gvir) அவர்களுக்கு தனது நாட்டில் நுழைவு தடை விதித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட “Global Sumud Flotilla” செயற்பாட்டாளர்களை அவர் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் காணொளிகள் வெளியாகி சர்வதேச ரீதியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ (Jean-Noël Barrot) சமூக வலைதளமான X இல் வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய குடிமக்கள் தொடர்புடைய “மிகவும் கண்டிக்கத்தக்க செயல்கள்” காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த காணொளிகளில், இஸ்ரேல் படையினர் சர்வதேச கடலில் தடுத்துப் பிடித்த கப்பல்களில் இருந்த சுமார் 430 பேரை அஷ்டோத் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற பின்னர், பென்-க்விர் அவர்கள் கைதானவர்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேல் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பென்-க்விர் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.





