Pallegama Hemarathana Thera மீது முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமும் நியாயமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூட்டமைப்பு ஒன்றின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணை ஒரே நபரைச் சார்ந்த வழக்காக மட்டும் அல்லாது, இலங்கையில் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை பரிசோதிக்கும் முக்கிய தருணமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மிகவும் இளவயதிலிருந்தே அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதுடன், இது குழந்தைக்கு எதிரான பாரிய குற்றமாகவும், அவரை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளின் தோல்வியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செல்வாக்கு மிக்க மதத் தலைவருக்கும், பாதிக்கப்பட்ட சமூகப் பின்னணியிலுள்ள சிறுமிக்கும் இடையிலான அதிகார வேறுபாடு நீதியின் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதில் பொலிஸார் தாமதம் காட்டியதாகவும், கைது செய்யப்பட்ட பின்னரும் தனியார் வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அரசியல், மத அல்லது நிறுவன அழுத்தங்களின்றி சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட, உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் அப்பாற்பட்டு உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் இப்போது அதனை செயலால் நிரூபிக்க வேண்டிய நேரமிது என தெரிவித்துள்ளது.





