அமெரிக்க நீதித்துறை (US Justice Department) இந்திய தொழிலதிபர் Gautam Adani மீது தொடரப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் திட்டத்துடன் தொடர்புடைய லஞ்ச ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நீதித்துறை இந்த முடிவை எடுத்ததாக மத்திய நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நீதித்துறை தாக்கல் செய்த குறுகிய அறிக்கையில், “இந்த வழக்கை மீளாய்வு செய்த பின்னர், குற்றச்சாட்டுகளை தொடர்வதற்கு மேலதிக வளங்களை ஒதுக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த வழக்கை முழுமையாக கைவிடும் முடிவுக்கு நியூயார்க் கூட்டாட்சி நீதிபதி இன்னும் ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க நிதி துறை (OFAC) அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மீது ஈரான் தடைகள் மீறல் தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கை $275 மில்லியன் ஒப்பந்தத்தின் மூலம் முடித்ததாக அறிவித்தது.
அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தை ஆணையமும் (SEC) தொடர்ந்திருந்த சிவில் மோசடி வழக்கை settlement மூலம் முடித்து வைத்துள்ளது. அதில் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி $18 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தற்போது சுமார் $80.8 பில்லியன் என Forbes மதிப்பிட்டுள்ளது. அவர் உலகின் 25-ஆவது பணக்காரராகவும், இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும் உள்ளார்.
இதற்கிடையில், வழக்கை கைவிடும் முடிவுக்கு முன்னதாக அதானி தரப்பு அமெரிக்காவில் $10 பில்லியன் முதலீடு செய்து 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க தயாராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





