2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரச சுகாதார சேவைக்கு 13,600 தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை அறக்கட்டளை நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 515 விஞ்ஞானப் பட்டதாரி (BSc Nursing) தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அரச பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், நாடு முழுவதும் உள்ள 31 அரச வைத்தியசாலைகளில் ஆறு மாத பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்த 515 பேர், தரம் III தாதியர் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்ட தாதியர்கள் தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.
அமைச்சரின் கூற்றுப்படி, இந்த நியமனங்களுடன் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு ஆட்சேர்ப்பு இலக்கின் சுமார் 30 சதவீதம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,867 தாதியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் மொத்த இலக்கின் 50 சதவீதத்தை எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி பெற்ற 3,441 பேரும் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். புதிய 515 பேருடன் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டுக்குள் மொத்தம் 3,956 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்கால சுகாதார சேவை விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்ப தாதியர் சேவையை வலுப்படுத்துவதற்கும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.





