மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 பயனாளிகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வீடமைப்பு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (25) சனிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரையோர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா, மற்றும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு காசோலைகளைப் பயனாளிகளுக்குக் கையளித்தனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வீ.பாஸித், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளரும், கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) திட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான வை. பி. நபாஸ், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.டனோஜன்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்,எம் ஆரிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சமூக அபிவிருத்தி சபையின் தவிசாளர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் வீடற்ற நிலையில் இருந்த மிகவும் தகுதியான 43 குடும்பங்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியுதவி இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் திட்டமானது கிராமிய மட்டத்தில் வீடற்ற சமூகத்தினருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளதோடு, பிரதேசத்தின் சமூகக் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்திக்கும் இது வலுச்சேர்க்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.



