எதிர்கால சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மாற்றங்களின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் டெஸ்ட் சுற்றுப்பயணங்களை ஒரு போட்டியாக மட்டுப்படுத்த இங்கிலாந்து பரிசீலித்து வருவதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, அடுத்தடுத்த Future Tours Programme (FTP) அட்டவணைக்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) புதிய திட்டமிடலை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, உள்நாட்டில் அதிக அளவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களை நடத்துவதோடு, சில வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ஒரு டெஸ்ட் போட்டியாக மட்டுப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்காலத்தில் இங்கிலாந்தின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்கள் ஒரு டெஸ்ட் போட்டியையும் அதனுடன் வெள்ளைப்பந்து (White-ball) போட்டிகளையும் உள்ளடக்கியதாக அமையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய சீர்திருத்தங்களுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பின் கீழ், டெஸ்ட் விளையாடும் 12 நாடுகளும் WTC தொடரில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதுவரை WTC தொடருக்கான அங்கீகாரத்திற்கு குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அவசியமாக இருந்த நிலையில், புதிய திட்டத்தின் கீழ் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கும் WTC அந்தஸ்து வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முறை சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டையும் பாதுகாக்க உதவும் என ECB ஆதரவு வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற முக்கிய அணிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் அதிகளவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களை நடத்தவும் இங்கிலாந்து திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ICC நிர்வாக சபை, இந்த WTC சீர்திருத்தங்கள் குறித்து இம்மாத இறுதியில் கலந்துரையாடவுள்ளதாகவும் The Guardian தெரிவித்துள்ளது.




