தமிழக அரசியலில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு

தமிழக அரசியலில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டிய சூழலில், இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் அக்கட்சி தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர். இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது.

வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும். எனினும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வது, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது.

இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.

உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம். அந்த கடிதங்களை ஆராய வேண்டும். அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன். போலீசிடமும் புகார் அளிக்க உள்ளேன் என்றார். தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது. த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது. உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டது. இதனை அறிந்து எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.

மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார். போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்துள்ளார். இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலி கடிதம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிண்டி காவல் நிலையத்தில் டி.டி.வி. தினகரன் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு வீடியோ வெளியிட்டு த.வெ.க. பதிலளித்து உள்ளது. அ.ம.மு.க. எம்.எல்.ஏ. சுய நினைவுடன்தான் கடிதம் கொடுத்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், அவர் தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியுடன் த.வெ.க.வுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதினார்.

யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறி, காமராஜ் கடிதம் கொடுத்த வீடியோ ஒன்று த.வெ.க. தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், காரில் அமர்ந்தபடி கடிதத்தில், காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் உள்ளன. த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. உண்மையை மறைத்து விட்டு பொய்யான தகவலை அவர் பேசி வருகிறார் என்றும் த.வெ.க. தெரிவித்து உள்ளது. இதனால், இந்த விவகாரம் பரபரப்பு அடைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore