இந்தோனேசியாவில் மவுண்ட் டுகோனோ எரிமலை வெடிப்பு: மூவர் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்

Mount Dukono எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சிக்கியிருந்த 20 மலையேற்ற பயணிகளில் 17 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Halmahera Island பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08) ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையை அண்மித்த பகுதிகளில் கிராமங்கள் அல்லது நகரங்கள் இல்லாத காரணத்தால் உடனடி பொதுமக்கள் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, 9 சிங்கப்பூரர்கள் மற்றும் 11 இந்தோனேசியர்கள் உட்பட மொத்தம் 20 பேர் எரிமலை வெடிப்பால் மலையில் சிக்கியுள்ளதாக உள்ளூர் மீட்புப் பிரிவு அறிவித்திருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உள்ளூர் மீட்புப் பிரிவு தலைவர் Iwan Ramdani, 17 பேர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், மீட்கப்பட்டவர்களில் எத்தனை பேர் சிங்கப்பூரர்கள் என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் காணாமல் போன மூவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், உயிர் தப்பியவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இரு சிங்கப்பூரர்கள் உட்பட மூவர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் பொலிஸ் அதிகாரி Erlichson Pasaribu தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மீட்புப் பிரிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களின் உடல்கள் இன்னும் மலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியான எரிமலை வெடிப்பு அபாயம் நிலவுவதால் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவு அறிவித்துள்ளது.

“இரவு தேடுதல் நடத்த விருப்பமின்மையால் அல்ல; தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் எச்சரிக்கைப்படி மவுண்ட் டுகோனோ தொடர்ந்தும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore