Sri Lanka Police ஊடகப் பிரிவு, SriLankan Airlines பெயரில் இடம்பெற்று வரும் மோசடி மொபைல் செயலி தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், “Sri Lankan Airline” எனத் தோற்றமளித்து WhatsApp வழியாக மக்களை ஏமாற்றி “SriLankan.apk” என்ற தீங்கிழைக்கும் செயலியை பதிவிறக்கம் செய்ய வற்புறுத்தும் மோசடி குழுவுடன் 011-7771979 என்ற இலக்கமும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த இலக்கம் தங்களது உத்தியோகபூர்வ மற்றும் சட்டபூர்வ தொடர்பு இலக்கமென SriLankan Airlines நிர்வாகம் விளக்கமளித்ததையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாக, பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த இலக்கத்தை நீக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விசாரணைகளில், மோசடிக்காரர்கள் கீழ்க்கண்ட போலி இணையத்தளங்களை பயன்படுத்தி “SriLankan.apk” என்ற செயலியை பரப்பி வருவதாக தெரியவந்துள்ளது:
srilankan[.]wuozgo[.]cc
srilankan[.]vaco[.]cc
srilankan[.]krgo[.]cc
இந்த செயலி “Banking Trojan” வகையைச் சேர்ந்த தீங்கிழைக்கும் மென்பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது மொபைல் சாதனங்களுக்கு தொலைநிலை அணுகலை வழங்கி, தனிப்பட்ட தகவல்களை திருடுவதோடு அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், OTP குறியீடுகள், வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் உயிரியல் அங்கீகாரத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பணம் மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் தொலைபேசி இலக்கங்கள்:
077-4558361
074-1142208
077-5791209
074-3268200
பொதுமக்களை விரைவான நிதி இலாபம் கிடைக்கும் என ஏமாற்றி இவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக எச்சரித்துள்ள பொலிஸார், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.




