பிரபல சமூக வலைத்தளமான Instagram தனது Direct Messages (DM) சேவையில் உலகளாவிய ரீதியில் End-to-End Encryption (E2EE) வசதியை நீக்க தீர்மானித்துள்ளது.
முன்னதாக Meta நிறுவனம், Facebook Messenger-இல் 2023 ஆம் ஆண்டு E2EE வசதியை முழுமையாக அறிமுகப்படுத்தியதுடன், Instagram-இலும் அதனை இயல்புநிலையாக (default) மாற்ற திட்டமிட்டிருந்தது. ஆனால் ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற முயற்சிக்குப் பிறகு, அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனிமேல் Instagram Direct Messages-இல் சாதாரண encryption முறையே பயன்படுத்தப்படும். இந்த முறையில், தேவையான சூழ்நிலைகளில் இணைய சேவை வழங்குநர்கள் தகவல்களை அணுகக்கூடிய வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானத்தை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் வரவேற்றுள்ளன. குறிப்பாக NSPCC அமைப்பு, E2EE தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான தவறான செயல்கள் மற்றும் grooming நடவடிக்கைகளை கண்டறிவதை கடினமாக்கும் என நீண்டகாலமாக எச்சரித்து வந்தது.
அதேவேளை, தனியுரிமை பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் இந்த முடிவு இணைய பாதுகாப்பு மற்றும் பயனர் தனியுரிமைக்கு பின்னடைவு என விமர்சித்துள்ளனர்.
Meta நிறுவனம், Instagram-இல் E2EE வசதியை பயன்படுத்தும் பயனாளர்கள் குறைவாக இருந்ததே இந்த முடிவிற்கான காரணம் என தெரிவித்துள்ளது. எனினும், பல ஆய்வாளர்கள் இது AI தொழில்நுட்ப பயிற்சிக்காக தரவுகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் புதிய அணுகுமுறையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
Instagram நிறுவனம் தனது புதிய விதிமுறைகளில், “2026 மே 8 முதல் Instagram-இல் End-to-End Encrypted Messaging ஆதரிக்கப்படாது” என அமைதியாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.




