12 வயது சிறார்களுக்கும் ஆயுள் தண்டனை: எல் சால்வடோரில் புதிய கடுமையான சட்டம்

எல் சால்வடோர் நாடு, 12 வயதிலிருந்து சிறார்களுக்கு கூட கடுமையான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டம் ஏப்ரல் 26 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை, பயங்கரவாதம், பாலியல் வன்முறை போன்ற கடுமையான குற்றங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

2022 மார்ச் மாதம் முதல் எல் சால்வடோரில் அவசரநிலை அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில குடிமக்கள் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் 90,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உலகில் அதிக கைதிகள் விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிலர் குற்றச்சாட்டுகள் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் கூட்டமாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த சட்ட மாற்றம் ஜனாதிபதி நயிப் புகேலே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானமாகும்.

இந்நிலையில், UNICEF உள்ளிட்ட அமைப்புகள் தீவிர கவலை வெளியிட்டுள்ளன. சிறார்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவது அவர்களின் மனநலம் மற்றும் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்றும், இது குற்றங்களை குறைக்க உதவாது என்றும் எச்சரித்துள்ளன.

மேலும், குழந்தைகள் குற்றச்சாட்டில் சிக்கியபோது அவர்களை திருத்தி சமூகத்தில் மீண்டும் இணைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் சர்வதேச தரநிலைகள் வலியுறுத்துகின்றன.

இச்சட்டம் சிறார்களுக்கு வழங்கப்பட்டிருந்த சில சட்ட பாதுகாப்புகளை நீக்கினாலும், காலம்தோறும் தண்டனை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு மற்றும் கண்காணிப்புடன் விடுதலை பெறும் சாத்தியமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயம் குறித்து சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore