மத்திய கிழக்கு மோதலின் பின்னணியில், இலங்கை ஒரு பேரல் எண்ணெய்க்கு $286 வரை செலுத்தியிருக்கக்கூடும் என HSBC வங்கியின் தலைவர் ஜார்ஜ் எல்ஹெடெரி தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர், மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் Brent crude போன்ற அடிப்படை எண்ணெய் விலைகள், ஆசிய நாடுகள் சந்திக்கும் உண்மையான செலவுகளை பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
“தலைப்புச் செய்திகளில் எண்ணெய் விலை $100 அல்லது $110 என கூறப்படுகிறது. ஆனால் நிஜத்தில் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் பெற முயன்றால் $140–$150 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இலங்கையில் அதிகபட்சமாக $286 வரை செலுத்தியதாக கேள்விப்பட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் மோதலின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடைகள், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளன. இதனால் எண்ணெய் ஏற்றுமதி மிகுந்த அளவில் குறைந்துள்ளது.
மேலும், கப்பல் போக்குவரத்து செலவுகள் பேரலுக்கு $30–$40 வரை அதிகரித்துள்ளதுடன், காப்பீட்டு கட்டணங்களும் 0.25% இலிருந்து 5% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை சிறிய பொருளாதார நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு, கடுமையான விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், உலக அரசியல் மோதல்களின் தாக்கத்திற்கு அவை எளிதில் பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அமெரிக்கா தடை நடவடிக்கைகளை நீக்காவிட்டால் செங்கடல் வழிப் போக்குவரத்தையும் மூடக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.





