முன்னாள் SriLankan Airlines தலைமை நிர்வாக அதிகாரி Kapila Chandrasena மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் வீதியிலுள்ள இல்லமொன்றில் இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டின் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்துக்கு கொழும்பு நீதவான் மருத்துவ அதிகாரியும் கோட்டை நீதவான் பசன் அமரசேகரவும் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் “சந்தேகத்திற்கிடமான மரணம்” எனக் கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெடவத்த மற்றும் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கபில சந்திரசேன மீது பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன. 2013 ஆம் ஆண்டு Airbus நிறுவனத்திலிருந்து ஆறு A-330 மற்றும் எட்டு A-350 விமானங்களை வாங்கிய விவகாரத்தில், 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாக அவரும் அவரது மனைவியும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு, 2020 ஆம் ஆண்டு தம்பதியரை கைது செய்த பின்னர் பிணையில் விடுவித்தது.
மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து, கடந்த மார்ச் 12 ஆம் திகதி கபில சந்திரசேன மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, குறித்த லஞ்சத் தொகையிலிருந்து முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் Priyankara Jayaratne அவர்களுக்கு 2 கோடி ரூபாவும், முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa அவர்களுக்கு 6 கோடி ரூபாவும் வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், அந்த வாக்குமூலம் அழுத்தத்தின் கீழ் பெறப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் மே 12 ஆம் திகதி வாக்குமூலம் வழங்க நீதிமன்றில் ஆஜராக அழைக்கப்பட்டிருந்தனர்.
54 நாட்கள் விளக்கமறியலில் இருந்த கபில சந்திரசேன, கடந்த மே 5 ஆம் திகதி ரூ. 5 இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 10 இலட்சம் மதிப்பிலான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இரண்டு நபர்கள் உறவினர்களாக போலியாக முன்னிலைப்படுத்தப்பட்டமை பின்னர் கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிணை நிபந்தனைகளை மீறியதற்கும் நீதிமன்ற நம்பிக்கையை மீறியதற்கும் எதிராக, கொழும்பு பிரதம நீதவான் கடந்த மே 7 ஆம் திகதி கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்ய புதிய பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




