இலங்கை கடற்பரப்பில் கடலியல் மற்றும் மீன்வள தொடர்பான விசேட அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்ட “Dr. Fridtjof Nansen” ஆய்வு கப்பல் தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பான Food and Agriculture Organization (FAO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆய்வு FAO மற்றும் நோர்வே அரசாங்கத்தின் இணைந்த “EAF-Nansen Programme” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
பல வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, மீன் வளங்கள், கடல் சூழல் அமைப்புகள் மற்றும் கடலியல் நிலைமைகள் தொடர்பான முக்கிய அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது இலங்கையின் கடல் வளங்களைப் பற்றிய ஆழமான புரிதலை உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், மேற்பரப்பு மற்றும் அடிக்கடல் மீன் இனங்கள் தொடர்பான தகவல்களுடன், கடல் நீரின் வெப்பநிலை, நீரோட்டங்கள், ஊட்டச்சத்து அளவுகள் மற்றும் கரைந்த ஆக்சிஜன் அளவுகள் போன்ற முக்கிய கடலியல் தரவுகளும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், கணவாய் இனங்கள் மற்றும் mesopelagic species போன்ற குறைவாக பயன்படுத்தப்படும் கடல் வளங்களின் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டதுடன், மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளிட்ட கடல் மாசுபாடு தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு, 1978–1980 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, இலங்கை கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஐந்தாவது விஞ்ஞான ஆய்வாகும். தற்போதைய கடல் சூழல் மாற்றங்கள் மற்றும் மீன் வள மாற்றங்களை கருத்தில் கொண்டு, இத்தரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவ்வாய்வில் National Aquatic Resources Research and Development Agency (NARA) நிறுவன விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியதுடன், நோர்வேயின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்ந்த நிபுணர்கள் மற்றும் கப்பற் குழுவினரும் இணைந்து பணியாற்றினர்.
இவ்வாய்வின் முடிவுகள் எதிர்கால மீன்வள முகாமைத்துவ திட்டங்கள் மற்றும் கொள்கை வடிவமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வள, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் Ramalingam Chandrasekar, “இந்த ஆய்வு இலங்கையின் மீன்வளத் துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. பெறப்பட்ட அறிவியல் தகவல்கள், கடல் வளங்களை நிலைத்தன்மையுடன் பாதுகாக்கவும், அதனை சார்ந்த வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும் உதவும்” என தெரிவித்துள்ளார்.
ஐ.நா. கொடியை ஏந்தும் ஒரே ஆய்வு கப்பலாகக் கருதப்படும் Dr. Fridtjof Nansen, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் அறிவு பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




