மன்னார் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்றையும், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடற்படையின் தகவலின்படி, வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (13) மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, பல இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடற்படை கப்பல்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அந்தப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்டன.
மேலும் மேற்கொண்ட நடவடிக்கையில், தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த நான்கு மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகும் மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





