அமெரிக்கா–ஈரான் இடையிலான புதிய பேச்சுவார்த்தை சாத்தியங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் எரிபொருள் விநியோக நிலைமை குறித்து முதலீட்டாளர்கள் மதிப்பீடு செய்து வருவதால், உலக எண்ணெய் விலைகள் புதன்கிழமை பெரிதாக மாற்றமின்றி நிலைத்த நிலையில் காணப்பட்டன.
பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 43 சென்ட் (0.5%) உயர்ந்து 95.22 அமெரிக்க டாலராக பதிவாகியது. அதேவேளை, அமெரிக்க West Texas Intermediate (WTI) க்ரூட் விலை 17 சென்ட் (0.2%) குறைந்து 91.11 டாலராக இருந்தது.
மத்திய கிழக்கில் நிலவும் போரின் காரணமாக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகிய ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் விநியோகத்தில் தொடர்ந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் “war premium” குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்பட்டால் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்கா ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தற்காலிக அனுமதியை புதுப்பிக்காது என அறிவித்துள்ளதும் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.





