Public Utilities Commission of Sri Lanka (PUCSL) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. புதிய மின்கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், 8% முதல் 14.4% வரை அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
தேசிய மின்சார அமைப்பு இயக்குநர், எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சார உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதையும், தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார் ரூ.38 பில்லியன் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிட்டதையும் தொடர்ந்து இந்த திருத்தம் முன்மொழியப்பட்டது.
நுகர்வோரின் சுமையை குறைக்கும் நோக்கில், அரசு ரூ.15 பில்லியன் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அது செப்டம்பர் 30 வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண அமைப்பின் படி, வீட்டு மின்பாவனையாளர்களில் 180 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை. எனினும், 210 யூனிட் மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பயன்பாட்டு அளவின் அடிப்படையில் கட்டண உயர்வு ஏற்படும்.
மதஸ்தலங்களுக்கும் 180 யூனிட் வரை கட்டண உயர்வு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்படும்.
அரச நிறுவனங்களின் மின்கட்டணம் சராசரியாக 11% அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்துறை பிரிவில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும்பாலும் பாதிக்கப்படமாட்டாது என்றும், பெரிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 18% வரை கட்டண உயர்வு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




