சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாருடன் இணைந்து (30 அன்று இரவு) விசேட நடவடிக்கையாக பிடித்துள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் மாடுகள் காரணமாக அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், விவசாயிகளின் பெறுமதியான பயிர்கள் சேதமடைவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகரப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்மாடுகளின் உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அவை புறக்கணிக்கப்பட்டதால், தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட மாடுகளை உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டியதுடன், ஒரு நாளுக்குள் பெறாத பட்சத்தில் பராமரிப்பு செலவும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறவில்லை எனில், அவை பொலிஸாரின் மூலம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்பதால், மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





