இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முழு European Union அளவில் வயது சரிபார்ப்பு (Age Verification) செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ursula von der Leyen தெரிவித்ததாவது, இந்த புதிய செயலி தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளதுடன், பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடாமல் தங்களின் வயதை நிரூபிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை App Store போன்ற தளங்களில் பதிவிறக்கம் செய்து, பாஸ்போர்ட் அல்லது தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் மூலம் ஒருமுறை உறுதிப்படுத்தினால், பின்னர் வயது வரம்பு கொண்ட இணையதளங்களை அணுகும்போது அடையாளம் வெளிப்படுத்தாமல் வயதை உறுதி செய்ய முடியும்.
இந்த முறை, COVID-19 காலத்தில் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ் முறையைப் போன்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி Digital Services Act நடைமுறைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபாசம், சூதாட்டம், மதுபானம் தொடர்பான இணைய உள்ளடக்கங்களுக்கு குழந்தைகள் அணுகுவதை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், இந்த செயலி “முழுமையாக அநாமதேயமாக” செயல்படும் என்றும், திறந்த மூல (open-source) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அதிக கவலை நிலவி வரும் நிலையில், இந்த புதிய முயற்சி முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.





