ஒருவரை மன உளைச்சலுக்கு அல்லது தொல்லைக்கு உள்ளாக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அல்லது மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்தாலோ ஒரு இலட்சம் வரை அபராதம்!

டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சட்ட நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்குச் செயல்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டத்தரணி திலன் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

நியாயமான காரணமின்றி, ஒருவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது அல்லது குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவரது தொலைபேசி இலக்கத்தை அவரது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொது வெளியிலோ பகிர்ந்து, அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.

இக்குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு,100,000ய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

அத்துடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கான அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் ஊடாக இவ்வாறான தொல்லைகளுக்கு உள்ளாகும் நபர்கள், அது தொடர்பான ஆதாரங்களுடன் அருகில் உள்ள காவல்துறை நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ (CID) முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பாக இது அமையும் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore