எரிபொருள் டேங்கர் கட்டணத்தில் 25% உயர்வு – விநியோகம் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பம்
மாவட்டங்களுக்கு இடையிலான எரிபொருள் டேங்கர் போக்குவரத்து கட்டணத்தில் 25% உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் விநியோகம் நாளை (28) முதல் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பமாகும் என லங்கா பெட்ரோலியம் தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம், டேங்கர் உரிமையாளர்கள் மற்றும் சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (CPC) உயர் அதிகாரிகளுக்கிடையே நேற்று (27) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி தெரிவித்ததாவது, டேங்கர் உரிமையாளர்கள் கோரிய 25% கட்டண உயர்வு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக கூறினார்.
“மாவட்டங்களுக்கு இடையிலான கட்டணத்தில் 25% உயர்வை பெற்றுள்ளோம். CPC வழங்கிய சாதகமான பதிலின் அடிப்படையில், இரு சங்கங்களும் நாளை காலை முதல் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க ஒருமனதாக தீர்மானித்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், கலந்துரையாடலில் நான்கு முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அவற்றுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
குறிப்பாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விலை நிர்ணய சூத்திரத்தை திருத்துவது முக்கிய கோரிக்கையாக இருந்ததாகவும், இதற்கான மேலதிக கலந்துரையாடல் வரும் செவ்வாய்க்கிழமை (31) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களுக்கு தீர்வு காண்பது தான் தங்களின் முன்னுரிமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





