ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால், உலகளவில் உணவு விலை கடுமையாக உயரக்கூடிய நாடுகளில் இலங்கை 2வது இடத்தில் உள்ளது என கீல் உலக பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் உருவான நெருக்கடியினால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்தில் ஏற்கனவே தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன.
ஆனால், இதன் தாக்கம் எரிபொருளை மட்டும் அல்லாது, அத்தியாவசிய இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விநியோகத்தையும் பாதிக்கக்கூடும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
BBC Verify தகவலின்படி, தினசரி இந்த நீரிணை வழியாக சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருந்து தற்போது மிகவும் குறைந்த அளவுக்கு வீழ்ந்துள்ளது, இது பொருட்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வின் படி, ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், இலங்கையில் உணவு விலை 15% க்கும் மேல் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜிம்பாப்வே உலகளவில் அதிக பாதிப்பு ஏற்படும் நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அங்கு உணவு விலை 30% க்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும், உரங்கள் (Fertiliser) போன்ற முக்கிய பொருட்களும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கற்பூர எண்ணெய் அடிப்படையிலான உரங்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாகவே உலகிற்கு அனுப்பப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.





