இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா (குர்பானி) கிரியையை நிறைவேற்றுவது தொடர்பில் (ACJU) தெளிவூட்டல்

இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா (குர்பானி) கிரியையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கும் தெளிவூட்டல்

இலங்கையில் அமுலில் உள்ள 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்படி மிருகங்களை அறுத்தல் மற்றும் மாமிச விற்பனையில் ஈடுபடல் தொடர்பான கட்டுப்பாடானது, குறிப்பாக பௌர்ணமி போயா நாளுக்கு மட்டுமே பொருந்தும். அது மே மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அந்தத் தினத்துக்கு முன்போ அல்லது பின்போ உழ்ஹிய்யா கடமையை செய்வதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை. எனினும், கலாச்சார ரீதியாக வெசாக் காலம் போயா நாளுடன் விரிவுபடுத்தப்படலாம்.

ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்புடைய சமய கிரியைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 23.04.2026ஆம் திகதி கடித மூலமாக அதிமேதகு ஜனாதிபதி, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் முறையாக தொடர்பு கொண்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் மிக முக்கிய முஸ்லிம் பிரதிநிதியான, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அவர்கள் கடந்த 26.04.2026 இல், போயா நாள் தவிர்ந்த பிற நாட்களில் உழ்ஹிய்யா கடமையை செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து சமூகங்களின் மத உரிமைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மதிக்கப்படும் என்றும், அதே சமயம் அமைதியான சகவாழ்வு மற்றும் தேசிய ஒற்றுமை முக்கியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் போயா தினம் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்; அந்தந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி போயா தினம் தவிர்ந்த தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததை ஞாபகப்படுத்துவதுடன், இம்முறையும் உழ்ஹிய்யா கிரியைகளை சுமுகமாக செய்வதற்கு எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறோம்.

எனவே, பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் காலாகாலமாக அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், கௌரவமாகவும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடித்து நமது உயர் கௌரவத்தைக் காத்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான தகவல்களை முஸ்லிம் சமூகத்துக்கு அவ்வப்போது தெரிவிக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore