உள்நாட்டு சந்தையில் மருந்து விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் மத்திய கிழக்கு நெருக்கடி, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்கள், சேவை களின் அதிகரித்த செலவுகள் காரணமாக இது தவிர்க்க முடியாத நிலையாக மாறக்கூடுமெனவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மருந்து இறக்குமதியாளர்களும் உள்ளூர் உற்பத்தியாளர்களும் செலவு உயர்வைக் கருத்திற்கொண்டு விலைகளை திருத்த ஆரம்பித்துள்ளன. அண்மைய காலங்களில் மருந்து விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
இந்நிலையில் மருந்து விலைகள் உயர்ந்தால் அது பொதுமக்களுக்கு, குறிப்பாக வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தாங்க முடியாத சுமையாக மாறக் கூடும்.
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய், மனநலக் கோளாறுகள் மற்றும் குழந்தைகளுடன் தொடர்புடைய நோய்கள் போன்ற நீண்டகால சிகிச்சைகளுக்கு காத்திருக்கும் நோயாளர்கள் மீது இதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.
மேலும், மருந்து விலைகளை கட்டுப்படுத்த அரசு அறிவித்த வர்த்தமானிகளுக்கு பிறகும் சில மருந்தகங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்வது வழக்கமாகி வருகிறது. இது அமுலாக்கம் தொடர்பான கடுமையான கவலைகளை ஏற்படுத்துகின்றன.
இந்நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து, தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கவும் குறைந்த வருமான பெறும் குடும்பங்களுக்கு மானியம் அல்லது நிவாரண திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவும் வேண்டும். இல்லையெனில் இது கடுமையான பொது சுகாதார நெருக்கடியாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





