முதலமைச்சர் விஜய்க்கு கஜேந்திரகுமார் வைத்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இது குறித்து அந்தப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தின் விபரம் வருமாறு:

தமிழகத்தில் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்து, மிகப்பெரிய சாதனையைப் படைத்து முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தங்களுக்குத் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய இனவழிப்பை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 18-ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில், ஈழத்தமிழர் மீது நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்றும், அதற்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழகம் இன்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்குப் பறைசாற்ற வேண்டியது அவசியமாகும். எனவே, 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழிமொழியும் வகையில், தங்களது தலைமையிலான தமிழக அரசின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடரிலேயே (நடப்பு மே மாதத்தில்) புதிய தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டும் என ஈழத்தமிழர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் எடுக்கும் இந்த முன்னெடுப்பானது, சர்வதேசக் குற்றவியல் விசாரணையை வலியுறுத்திப் போராடி வரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் பலத்தைச் சேர்க்கும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் இதயங்களில் தங்களுக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத் தரும் என அந்தக் கடிதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore