மத்திய வங்கி மற்றும் திறைசேரி தொடர்பான சர்ச்சைக்கரிய பணக் கொடுக்கல்வாங்கல் குறித்து, பாராளுமன்ற நிதிக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிப்பதாக ‘சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம்’ குற்றம் சுமத்தியுள்ளது.
8 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் மூலம், உயர் அதிகாரிகளைப் பாதுகாத்து, தவறை கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மீது சுமத்த முயற்சிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121-இன் கீழ் நிதிக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வப் பொறுப்பை இந்த அறிக்கை மீறியுள்ளதாகவும், இது வெறும் தகவல்களைத் திரட்டும் ஒரு அறிக்கையாக மாத்திரமே அமைந்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோசடியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தமது தவறுகளை மறைப்பதற்கும், ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் நிதிக் குழு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியதன் மூலம் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
30 நாட்கள் கடந்தும் மத்திய வங்கியின் நிர்வாக அதிகார சபை இது குறித்து மௌனம் காப்பதாகவும், மத்திய வங்கியின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கே குழு செயற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறைசேரி, வெளிநாட்டு வளங்கள் மற்றும் கடன் முகாமைத்துவப் பிரிவுகள் தமக்கிடையே எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி மூன்று சுயாதீனமான கணினி கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதே இந்த நெருக்கடிக்குக் காரணம் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஒழுங்குவிதி 135-இன் கீழ் நிதி அதிகாரத்தை கையளிக்கும் போது, பிரதான கணக்கீட்டு அதிகாரியான நிதிச் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும முறையான விழிப்புணர்வுடன் செயற்படவில்லை என ‘சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம்’ தெரிவித்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகையிலான நிதிப் பொறுப்பை ஒரு தனிப் பணிப்பாளரிடம் ஒப்படைப்பது ஒரு தவறான நிர்வாக நடைமுறை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“உண்மையான குற்றவாளிகளை மறைக்க வேண்டிய அரசாங்கத்தின் தேவைக்காக, பாராளுமன்ற நிதிக் குழு தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாக” அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.




