இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) மற்றும் IPG குழுமம் இணைந்து நடத்தும் லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்கள் பதிவுகள் இன்று (08) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
www.srilankacricket.lk இணையதளத்தின் ஊடாக நடைபெறும் இந்த ஆன்லைன் பதிவு நடவடிக்கை, 2026 மே 20ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள LPL ஆறாவது சீசனில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி வீரர்கள் ஏற்கனவே ஆர்வம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், அமெரிக்கா, ஓமான், இத்தாலி, நமீபியா மற்றும் நெதர்லாந்து போன்ற வளர்ந்து வரும் மற்றும் இணை உறுப்பினர் கிரிக்கெட் நாடுகளிலிருந்தும் திறமையான வீரர்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட LPL போட்டித் தொடர் இயக்குநர் சமந்த டொடன்வெல,
“LPL ஆறாவது சீசனில் பங்கேற்க உலகின் பல கிரிக்கெட் நாடுகளிலிருந்தும் முன்னணி வீரர்கள் ஆர்வம் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வீரர்களிடமிருந்து கிடைக்கும் இந்த அபாரமான வரவேற்பு, LPL தொடரின் சர்வதேச மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது,” என தெரிவித்தார்.
மேலும், 2026 சீசனில் ஒவ்வொரு அணிக்கும் இரண்டு சர்வதேச மார்கி வீரர்களையும், இரண்டு இலங்கை மார்கி வீரர்களையும் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




