வியட்நாம் ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் அவர்களின் இலங்கை அரசுமுறை விஜயத்தின் போது, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகள் தங்களது இருதரப்பு உறவுகளை “முழுமையான கூட்டாண்மை” (Comprehensive Partnership) நிலைக்கு உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த புதிய கூட்டாண்மையின் நோக்கமாகும்.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த நடவடிக்கை எடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) அமைப்பில் ஆரம்ப உறுப்பினராக இணைய இலங்கை காட்டியுள்ள ஆர்வத்தையும் வியட்நாம் வரவேற்றுள்ளது.
பொது பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் சர்வதேச குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளதுடன், பாதுகாப்புத்துறை தகவல் பரிமாற்றங்களையும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளன.
மேலும், அடிப்படை வசதிகள், தொலைத்தொடர்பு, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுலா கட்டமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயம் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இந்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சமயம், கலாசாரம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் உள்ளிட்ட துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.




