தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் காய்ச்சல் நிலைமையை ஆய்வு செய்வதற்காக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று தெனியாயக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க, தற்போதைய நிலைமை தொற்றுநோய் பரவல் மட்டத்தை எட்டவில்லை என தெரிவித்தார்.
காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து பரிந்துரைப்பதற்காகவே இந்த விசேட குழு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக, தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டியகொட, மே 07 மற்றும் 08 ஆகிய தினங்களில் அப்பகுதியில் உள்ள நான்கு பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி,
தெனியாய மத்திய கல்லூரி
தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம்
தெனியாய செயின்ட் மெத்தியூஸ் இருமொழிப் பாடசாலை
பள்ளேகந்த சித்தார்த்த வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தென் மாகாண கல்விச் செயலாளர் N.K.R. பதிரண, பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான இறுதி முடிவு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.




