அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானில் மேற்கொள்ளக்கூடிய கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை செனட் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.
இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 47–52 என்ற வாக்குகளால் தோல்வியடைந்தது. பெரும்பாலும் கட்சி வரிசைப்படி வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
குடியரசுக் கட்சியில் ஒரே ஒருவராக செனட்டர் ராண்ட் பால் ஆதரவு அளித்த நிலையில், ஜனநாயகக் கட்சியில் ஜான் பெட்டர்மன் மட்டும் எதிராக வாக்களித்துள்ளார். மேலும் ஒரு செனட்டர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானம், அமெரிக்க இராணுவம் ஈரானில் ஈடுபடும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் அனுமதி இல்லாமல் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தியது.
ஆனால் குடியரசுக் கட்சியினர் பெரும்பாலும் இதை நிராகரித்துள்ளனர். அதே நேரத்தில் சில செனட்டர்கள் 60 நாட்கள் வரம்புக்குப் பிறகு இந்த போர் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சட்டப்படி, 1973 ஆம் ஆண்டின் War Powers Resolution சட்டத்தின் கீழ், 60 நாட்களுக்கு மேல் போர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனில் காங்கிரஸ் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், ஈரான் போர் நீடித்தால் எரிசக்தி விலைகள் உயர்வதும், அதனால் அரசியல் அழுத்தம் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க செனட் எதிர்க்கட்சித் தலைவர் சக் ஷூமர், “ஒவ்வொரு வாரமும் இந்த தீர்மானத்தை மீண்டும் முன்வைப்போம்” என தெரிவித்துள்ளார்.





