இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 11.30 மணியளவில் மல்வத்தை – சடயந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள மஜிட்புரம் சந்தியில் இடம்பெற்ற இணைந்த மோட்டார் சைக்கிள் விபத்துகளில் மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த 4 ஆண்களும், மஜிட்புரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மல்வத்தை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வண்டு வாய்க்காலில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்தப் பகுதியில் குளிக்க வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு பரிச்சயமில்லாத சம்மாந்துறை பகுதி மக்கள் கவனக்குறைவாகவும் அதிக வேகத்திலும் மோட்டார் சைக்கிள்களை இயக்குவதால் இவ்வாறான விபத்துகள் ஏற்படுகின்றன என மஜிட்புரம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.





