ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், “Economic Fury” நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட தகவலின்படி, கடலில் சிக்கியுள்ள ஈரான் எண்ணெய் விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த 30 நாள் தளர்வு (waiver) காலம் இவ்வாரம் முடிவடைய உள்ளதால், அது மேலும் நீட்டிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மத்திய கிழக்கு போரினால் அதிகரித்த எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், சுமார் 140 மில்லியன் பேரல்கள் ஈரான் எண்ணெய் கடலில் இருந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அனுமதி ஏப்ரல் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் கடுமையான இரண்டாம் நிலை தடை நடவடிக்கைகள் (secondary sanctions) எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சீனா, ஹொங்கொங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் உள்ள சில வங்கிகள் ஈரானுடன் தொடர்புடைய நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றுக்கும் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், உலக எரிபொருள் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.





