ஹந்தானா மலைத் தொடரில் உள்ள “கட்டுசு கொண்டா” மலைச் சிகரத்தை கடக்க முயன்ற போது வழி தவறி காணாமல் போன ஒருவரை, இலங்கை இராணுவம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கைக்காக இலங்கை சிங்கள ரெஜிமென்டின் 2வது (தன்னார்வ) படைப்பிரிவு, 111வது காலாட்படை பிரிகேடின் கீழ் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இரண்டு அதிகாரிகள் மற்றும் எட்டு படையினரை உள்ளடக்கிய குழு ஏப்ரல் 12 அன்று மாலை 6.40 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தது.
இருள் மற்றும் கடும் மூடுபனி போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், ஏப்ரல்13 அன்று காலை 7.45 மணியளவில் காணாமல் போன நபர் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டு, இராணுவத்தினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





